காதலியை 35 துண்டுகளாக்கி, ஃபிரிட்ஜில் பதுக்கி; தினம் ஒன்றாக வீசியெறிந்த கொடூரன்

By காமதேனு

டெல்லியில் ’லிவிங் டுகெதர்’ முறையில் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த காதலியை துள்ளத்துடிக்க கொன்று, சடலத்தை 35 துண்டுகளாக்கி, அவற்றை குளிர்சாதன பெட்டியில் பதுக்கி, தினம் ஒன்றாக வீசியெறிந்த கொடூரனை போலீஸார் இன்று(நவ.14) கைது செய்துள்ளனர்.

மும்பை கால்சென்டர் ஒன்றில் சேர்ந்து பணியாற்றும்போது அஃப்தாப் அமின் பூனாவாலா - ஷ்ரத்தா இடையே காதல் முளைத்தது. இந்த காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், 27 வயதாகும் அப்பெண் காதலனுடன் டெல்லியில் குடியேறினார். கடந்த ஏப்ரல் இறுதியில், அப்படி அவர்கள் டெல்லிக்கு வந்த ஒரு சில வாரங்களில் ஷ்ரத்தா தகவல்தொடர்பு எல்லைக்கு அப்பால் போனார். மகளைத் தேடி ஷ்ரத்தாவின் பெற்றோர் டெல்லியில் அலைந்து திரிந்தனர். ’சேர்ந்து வாழ்ந்த பெண் இப்போது எங்கே போனால் என்று தெரியவில்லை’ என அலட்சியமாக அஃப்தாப் கைவிரித்தான்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷ்ரத்தா எல்லோரிடமும் கனிவாக பழகக் கூடியவர். சக பெண்ணை தொலைத்த நண்பர்களும் தங்கள் பங்குக்கு தேட ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருவர் ’அஃப்தாப் மீது சந்தேகமாக இருக்கிறது’ என்று காவல்துறையிடம் தெரிவிக்க, அஃப்தாபை அள்ளி வந்து போலீஸார் தங்கள் பாணியில் விசாரித்தனர். அவர்களிடம் பிடிகொடுக்காது அஃப்தாப் சாதித்தான். அவனது முன் வாழ்க்கையும் குற்றப்புகார்கள் ஏதுமின்றி இருக்கவே போலீஸ் விசாரணையும் துவண்டது.

அஃப்தாப்

அஃப்தாப் - ஸ்ரத்தா சேர்ந்து வாழ்ந்த வீட்டில் புது ஃபிரிட்ஜ் இருந்ததும், அதனை வாசனை திரவியங்களால் அஃப்தாப் பராமரித்து வந்ததும் ஒரு போலீஸ் அதிகாரியின் மூக்கை நிரடியது. அஃப்தாபின் அண்மைக்கால நடவடிக்கையை ஆராய்ந்தபோது அவன் தினமும் இரவு குறிப்பிட்ட நேரத்தில் நகரின் வெவ்வேறு ஒதுக்குபுறங்களுக்கு சென்று வந்தது தெரிய வந்தது. டெல்லி காவல்துறை கடந்து வந்த முந்தைய குற்ற வழக்குகளின் அனுபவ அடிப்படையில் தோராய ஸ்கெட்ச் ஒன்றை வரைந்தனர். அந்த கோணத்தில் விசாரணை சூடுபிடித்ததில் அவர்களின் ஊகம் ஊர்ஜிதமானது.

மும்பையில் இனித்த அஃப்தாப் -ஸ்ரத்தா காதல் டெல்லியில் சேர்ந்து வாழ ஆரம்பித்ததுமே கசந்துபோனது. திருமணத்துக்கு ஷ்ரத்தா வலியுறுத்தியதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அப்படி தொடர்ந்த சச்சரவின் முடிவில் ஸ்ரத்தாவை கொன்ற அஃப்தாப், சடலத்தை 35 துண்டுகளாக்கி இருக்கிறான். புது ஃபிரிட்ஜ் ஒன்றை வாங்கி வந்து அதில் ஷ்ரத்தா துண்டங்களை அடுக்கி வைத்தவன், தினம் ஒன்றாக நள்ளிரவில் வெளியேறி நகரின் வெவ்வேறு பகுதிகளில் ஒவ்வொரு துண்டாக வீசியெறிந்துள்ளான். தடயங்கள் ஏதுமின்றி வீட்டை துடைத்து வைத்ததோடு, சடல துண்டுகள் நிறைந்த குளிர்சாதன பெட்டியை அவ்வபோது வாசனை திரவியங்களால் குளிப்பாட்டி இருக்கிறான். இப்படி சுமார் 18 நாட்களாக தனது நள்ளிரவு டெல்லி நகர்வலத்தை நிகழ்த்தி இருக்கிறான். ஓடிடியில் வெளியான ’டெக்ஸ்டர்’ என்ற ஹரர் வலைத்தொடர் ஒன்றை பார்த்து குற்ற சம்பவத்தை அஃப்தாப் திட்டமிட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.

இத்தனை கொடூரத்தையும் செய்துவிட்டு ஒன்றும் அறியாதவன் போல சாதித்தவனிடம், விசாரணையை முழுமையாக தொடர போலீஸார் தடுமாறி வருகின்றனர். மும்பை மற்றும் டெல்லி மாநகர சேர்ந்து விசாரிக்கும் இந்த கொலை வழக்கு தற்போது நாட்டின் மிகவும் சென்சிடிவான பிரச்சினையாகவும் உருவெடுத்திருக்கிறது. அஃப்தாப் - ஸ்ரத்தா ஆகியோர் இருவேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால், நடந்த கொலையை லவ் ஜிகாத் கோணத்திலும் சில தரப்பினர் கொண்டு செல்கின்றனர். தற்போது அஃப்தாபை 5 நாள்களுக்கு காவலில் எடுத்திருக்கும் போலீஸாரின் விசாரணை நிறைவடையும்போது மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகக் கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE