மது அருந்திவிட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் மரணம்: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த சோகம்

By காமதேனு

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பட்டதாரி வாலிபர் உயிரிழந்துள்ளார்.

சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ காலனி 8வது தெருவை சேர்ந்தவர் சீதாபதி. இவரது மகன் மகாவிஷ்ணு(21) தனியார் கல்லூரியில் பிசிஏ இறுதியாண்டு பிடிப்பு முடித்து விட்டு வேலை தேடிவந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மகாவிஷ்ணு தனது நண்பர் ராம்குமார் பிறந்த நாளை முன்னிட்டு ரெட்டேரி 200 அடி சாலையில் உள்ள தனியார் பாரில் மது அருந்த சென்றுள்ளார்.. அங்கு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய மகாவிஷ்ணு பின்னர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்று உறங்கினார். தினமும் குறட்டை விட்டு தூங்கும் மகாவிஷ்ணு நேற்று இரவு அமைதியாக தூங்கி கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் இன்று அதிகாலை அவரை எழுப்ப முயன்றனர். அப்போது அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

உடனே மகாவிஷ்ணுவை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் மகா விஷ்ணு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பின்னர் போலீஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் எம்கேபி நகர் போலீஸார் விரைந்து சென்று விஷ்ணு உடலை கைபற்றி விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் மகாவிஷ்ணுவின் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் வியாசர்பாடியில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு தூங்கிய ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE