புழல் அருகே சுற்றிவளைத்த போலீஸார்: துப்பாக்கி முனையில் 2 ரவுடிகள் கைது

By KU BUREAU

திருவள்ளூர்: கொலை உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 2 ரவுடிகளை புழல் அருகே துப்பாக்கி முனையில் போலீஸார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சேது என்கிற சேதுபதி (30). ஆவடி காவல்ஆணையரகத்துக்கு உட்பட்ட சோழவரம் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது சோழவரம், மீஞ்சூர், காட்டூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 5 கொலைவழக்குகள் உட்பட 30-க்கும்மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆவடி மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டங்களில் ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சோழவரம் காவல்நிலைய எல்லையில் நடந்தகஞ்சா வழக்கு தொடர்பாக 6 மாதங்களாக சேதுபதி போலீஸாரால் தேடப்பட்டு வந்தார். இச்சூழலில் சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக ரவுடிகளை ஒடுக்குவதில் ஆவடி காவல் ஆணையரகம் தீவிரம் காட்டி வருகிறது.

ரகசிய இடத்தில் விசாரணை: இந்நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்தின் தனிப்படை போலீஸாருக்கு நேற்று மதியம் ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படைபோலீஸார் நடத்திய சோதனையில் புழல் ஏரிக்கரையில் சேதுபதியும், அவரது கூட்டாளியான மீஞ்சூர் அருகே காட்டூர் பகுதியைசேர்ந்த பிரபு என்ற ரவுடியும் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் துப்பாக்கி முனையில்இருவரையும் கைது செய்தனர்.

கைதானவர்களில் சேதுபதி, கடந்த ஆண்டு சோழவரம் அருகே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி முத்துசரவணனின் எதிர்தரப்பாக செயல்பட்டவர்.

பிரபு மீது மீஞ்சூர், காட்டூர்உள்ளிட்ட காவல்நிலையங்களில் 2 கொலை வழக்குகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி முனையில் கைதுசெய்யப்பட்ட ரவுடிகள் சேதுபதி, பிரபு ஆகிய இருவரை தனிப்படை போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE