பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

By KU BUREAU

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கன்னுக்குடிபட்டியை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுள்ளனர்.

பாதையாத்திரை புறப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி பகுதியில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

இதில் உடல் நசுங்கி முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சங்கீதா, லட்சுமி ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உயிரிழந்த நால்வரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஓட்டுநர் சுந்தர்ராஜன் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் லட்சுமி உயிரிழந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE