மதுரை: மதுரையில் ‘நாம் தமிழர் கட்சி' நிர்வாகி பாலசுப்பிரமணியன் நேற்றுவெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை செல்லூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(46). நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி மாவட்ட துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். இந்நிலையில், நேற்று காலை தல்லாகுளம் காவல் நிலையம் அருகேஉள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெருவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பாலசுப்பிரமணியத்தை வழிமறித்த 4 பேர் கும்பல்,அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, ஓடிவிட்டது.
பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். எனினும், அவர் வழியிலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை மதுரை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் ராஜேஸ்வரன் மற்றும் போலீஸார், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரணம் என்ன? கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு மனைவி செல்வி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.
» திண்டிவனம் அருகே 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை: 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
» காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் உயிரிழப்பு
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, பாலசுப்பிரமணியனின் தம்பி பாண்டியன் என்பவரின் மகளை, மகாலிங்கம் என்பவரது மகனுக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளனர். அதில்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாலசுப்பிரமணியனுக்கும், மகாலிங்கத்துக்கும் விரோதம் இருந்துள்ளது. இதன்காரணமாக மகாலிங்கம் ஆட்களைஏற்பாடு செய்து, பாலசுப்பிரமணியனை கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. அதேநேரத்தில், அரசியல் காரணம் எதுவும் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என்றனர். இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியினர் அரசு மருத்துவமனை முன் திரண்டதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது
மாநிலம் முழுவதும் போராட்டம்: கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் படுகொலை மிகவும்அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இந்த படுகொலை சாட்சி. அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?
எனவே, பாலசுப்ரமணியன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து, கடும் தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதை செய்யத் தவறினால், மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.