ஆசை வலையில் வீழ்த்தி அந்தரங்க வீடியோ பதிவுசெய்த கல்லூரி மாணவி: கர்நாடக மடாதிபதி தற்கொலையில் திடுக்கிடும் தகவல்கள்

By காமதேனு

கர்நாடகாவில் லிங்காயத்து மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை வழக்கில், அவரை மிரட்டியதாகக் கூறி 21 வயதுடைய பொறியியல் மாணவியும், போட்டி மடத்தைச் சேர்ந்த மடாதிபதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொறியியல் மாணவியான அந்த இளம் பெண், பசவலிங்க சுவாமியுடன் நட்பாக பழகி, ஏப்ரலில் அந்தரங்க வீடியோ அழைப்புகளை பதிவு செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். அந்த அழைப்பு பதிவுகளை வைத்துக்கொண்டு அந்த பெண்ணும், கண்ணூர் மடத்தின் தலைவரான மிருத்யுஞ்சய சுவாமியும், பசவலிங்க சுவாமியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

45 வயதான பசவலிங்க சுவாமி, கடந்த அக்டோபர் 24-ம் தேதி, கஞ்சுகல் பந்தே மடத்தில் உள்ள தனது பூஜை அறையில் ஜன்னலில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவர் எழுதிய இரண்டு பக்க தற்கொலைக் குறிப்பில், ‘சிலர் வீடியோக்களால் தன்னை மிரட்டி துன்புறுத்துவதாகவும், தெரியாத பெண் ஒருவர் என்னிடம் இதைச் செய்துள்ளார்’ என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அவரை மிரட்டியதற்காக கைது செய்யப்பட்ட மிருத்யுஞ்சய ஸ்வாமி, நீண்ட கால பகை காரணமாக 1997ம் ஆண்டு முதலே பசவலிங்க சுவாமி தலைமையில் இருந்த கஞ்சுகல் பந்தே மடத்தை கையகப்படுத்த விரும்பியதாக போலீசார் தெரிவித்தனர். " இந்த பிளாக்மெயிலுக்கு முக்கிய காரணம், இவர்கள் பழிவாங்க நினைத்ததே. மடாதிபதிகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. எனவே பிப்ரவரியில் அவரை சிக்க வைக்க திட்டமிட்டு, ஏப்ரலில் வீடியோ எடுத்தனர்" என்று போலீஸ் அதிகாரி எஸ் சந்தோஷ் பாபு தெரிவித்தார்.

தற்கொலை செய்து கொண்ட மரணம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், மிருத்யுஞ்சய ஸ்வாமி மற்றும் அவருக்கு உதவிய பெண்ணை கைது செய்வதற்கு முன்பு, தற்கொலை செய்துகொண்ட மடாதிபதியின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து, சுமார் 25 பேரை விசாரித்தனர். மிருத்யுஞ்சய சுவாமியின் விருப்பத்தின் பேரில் பசவலிங்க சுவாமியை அந்தப் பெண் "ஹனிட்ராப்" செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் பசவலிங்க சுவாமியை மிரட்டி, பதவியை கைவிடுமாறு அழுத்தம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். பசவலிங்க சுவாமி ஏற்கனவே இவர்களுக்கு பெரும் தொகை கொடுத்துள்ளார்.

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக முருகா மடத்து மடாதிபதி சிவமூர்த்தி முருகா கைது செய்யப்பட்டதன் காரணமாக பசவலிங்க சுவாமி பீதியடைந்து இந்த முடிவினை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE