சாலையை கடக்க முயன்ற நீதிபதி பைக் மோதி பலியான சோகம்: போலீஸார் விசாரணை

By KU BUREAU

கோவை: பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது

பொள்ளாச்சி அருகே சின்னம்பாளையம் பகுதியில் வசிப்பவர் கருணாநிதி(58). இவர் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று மதியம் வீட்டிலிருந்து பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரத்தில் உள்ள மளிகைக் கடைக்கு தனது காரில் வந்து இறங்கி சாலையை கடந்துள்ளார். அப்போது உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் நீதிபதி கருணாநிதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில், பலத்த காயமடைந்த நீதிபதி கருணாநிதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நீதிபதி கருணாநிதி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நீதிபதி மீது இருசக்கர வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நீதிபதி கருணாநிதி, கடந்த ஒரு மாதம் முன்பு பழநியில் உள்ள நீதி மன்றத்தில் இருந்து உதகைக்கு பணிமாறுதலாகி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE