தோட்டக் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு: பழனி அருகே பரபரப்பு!

By காமதேனு

பழனி அருகே தோட்டக் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வேட்டைக் கும்பலை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில் உள்ளது மானூர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. இங்கு வன விலங்குகள் அடிக்கடி தோட்டங்களுக்குள் புகுந்துவிடும். இதனால் இரவில் தோட்டங்களில் காவலாளிகளை நியமித்துக் கண்காணிப்பது வழக்கம். இங்குள்ள தோட்டம் ஒன்றில் கும்பகோணத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் காவலாளியாக வேலை செய்துவந்தார். கார்த்தி நேற்று இரவு வழக்கம்போல் தோட்டக் காவலில் இருந்தார். அப்போது, திடீரென அந்தப் பகுதியில் வேட்டைக் கும்பல் நுழைந்தது. இதைப் பார்த்ததும், அவர் சத்தம் போட்டார்.

உடனே கார்த்தியை நோக்கி வேட்டைக் கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதில் அவரது நெஞ்சில் குண்டு பாய்ந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கார்த்தி, பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் நெஞ்சில் இருந்த குண்டை அகற்ற முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேட்டைக் கும்பல்களை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE