திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்தது. போலீஸார் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று நள்ளிரவு மேலப்பாளையம் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களைக் கண்காணித்த போலீஸார் அவர்களை விசாரித்தனர். அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்களிடம் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.
போலீஸார் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் அவர்கள், மேலப்பாளையம் நாகம்மாள்புரத்தைச் சேர்ந்த பால்துரை(24), அவரது நண்பர் முத்துராஜ்(20) என்பது தெரியவந்தது. இதில் பால்துரை மீது ராஜபாளையம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. இவர்கள் வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டாக்கள் இல்லை. அந்தத் துப்பாக்கியும் பயன்பாட்டில் இல்லாமல் லேசாகத் துருப்பிடித்து இருந்தது. துப்பாக்கியைக் கீழே கிடந்து எடுத்ததாக இருவரும் தெரிவித்தனர். எனினும் அவர்களைக் கைதுசெய்த போலீஸார் இருவரும் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு துப்பாக்கியை வாங்கி, விற்றார்களா எனும் எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.