16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(34). இவருக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் ஆன நிலையில், அவரின் மனைவிகள் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர். சகோதரி லலிதா மற்றும் தாயுடன் வெங்கடேசன் தங்கியிருக்கிறார். மேலும் அந்த வீட்டின் அருகே உள்ள அவருக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது 16 மற்றும் 14 வயது மகள்கள் மற்றும் ஒரு மகனோடு வசித்து வருகிறார்.
இந்நிலையில் வெங்கடேசனின் குடும்பத்தினர், வாடகை வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமியை வெங்கடேசனுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் கேட்டிருக்கிறார்கள். அதற்குச் சிறுமியின் தாய் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி வெங்கடேசன் பலமுறை அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் லலிதாவின் ஆண் நண்பர்கள் சிலரும் அந்த சிறுமிக்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.
இந்நிலையில் சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக அவரின் தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வெங்கடேசன், லலிதா மற்றும் அவரின் தாய், லலிதாவின் ஆண் நண்பர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.