திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: தஞ்சாவூர் அருகே பரபரப்பு

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: பேராவூரணி அருகே திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சித்துக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (48). இவர் திமுக கிளைச் செயலாளராகவும், அரசு ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இவருக்கு இலக்கியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று ராதாகிருஷ்ணன் வலப்பிரம்மன்காடு கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். இவரது தாயார் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி வீட்டின் அறையில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு மர்ம மனிதர்கள் மதுபாட்டிலில் பெட்ரோல் குண்டு தயார் செய்து ராதாகிருஷ்ணன் வீட்டின் பால்கனியில் வீசி உள்ளனர். இதனால் பால்கனி மற்றும் ஜன்னல்களில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைந்தன. நல்வாய்ப்பாக இதனால் தீ விபத்து போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை.

இந்நிலையில், இன்று காலை ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்த போது, வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வீசியதற்கான அடையாளங்கள் தெரிந்தது. உடனே இது குறித்து ராதாகிருஷ்ணன் திருச்சிற்றம்பலம் போலீஸில் புகார் செய்தார். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களையும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE