மலேசியாவுக்கு கடத்த முயன்ற 150 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: ஒருவர் கைது

By சி.கண்ணன்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயற்சி செய்த 150 நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு பயணிகள் விமானம் இன்று புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் சுற்றுலா விசாவில் மலேசியா செல்வதற்காக வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர் கொண்டு வந்திருந்த இரண்டு அட்டைப் பெட்டிகளை திறந்து சோதனை செய்தனர். அதில், 150 நட்சத்திர ஆமைகள் இருந்தன. இதையடுத்து, ஆமைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், தடையை மீறி நட்சத்திர ஆமைகளை கடத்தியதற்காக அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், “ஆந்திர மாநிலம் சதுப்பு நிலப்பகுதிகளில் இருந்து இந்த நட்சத்திர ஆமைகளை தலா ரூ.100 கொடுத்து வாங்கி வருகிறேன். மலேசியாவில் பெரிய வீடுகளில் தொட்டிகளில் மீன் வளர்ப்பது போல், நட்சத்திர ஆமைகளை வளர்க்கின்றனர். மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஒரு ஆமையை ரூ.5 ஆயிரத்துக்கு வாங்குவார்கள்” என்றார்.

பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE