ராமேஸ்வரம் கோயிலில் வடமாநில வாலிபர் மீது தாக்குதல் - கோயில் ஊழியர் மீது புகார்!

By KU BUREAU

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் மீது கோயில் பணியாளர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிகில் என்ற இளைஞர் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சாமி தரிசனம் மேற்கொள்ள சென்ற அவர்களை, பேரிகார்டைத் தாண்டி உள்ளே வந்ததாக கூறி அங்கு பணியில் இருந்த கோயில் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. நிகிலுக்கு தமிழ் தெரியும் என்பதால், ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள்? என கேட்டுள்ளார்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் கோயில் பணியாளர் தாக்கியதில் நிகிலின் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் போலீஸார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டியதால், நிகிலை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கோயில் பணியாளரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக நிகில் ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பல ஆயிரம் கிலோமீட்டர் கடந்து குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் கோயில் ஊழியர் தரக்குறைவாக பேசி, ரத்தக்காயம் ஏற்படும் வகையில் தாக்கியதாக பக்தர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE