சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீஸார்

By மு.வேல்சங்கர்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மர்மநபரால் கடத்தப்பட்ட 3 வயது குழந்தையை ஒரு மணி நேரத்தில் ரயில்வே போலீஸார் மீட்டனர்.

தெலங்கானா மாநிலம் வாரங்கலைச் சேர்ந்தவர் சிந்தலா சன்னி. இவர் தனது குடும்பத்தினர், உறவினர்கள் என 15 பேருடன் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சென்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை (மே 19) காலை எழும்பூர் ரயில் நிலையம் வந்தார்.

எழும்பூரில் இருந்து சார்மினார் விரைவு ரயிலில் ஐதராபாத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். சிந்தாலா சன்னி மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் எழும்பூர் ரயில் நிலைய காத்திருப்போர் அறையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். அங்கு சிந்தலா சன்னியின் 3 வயது மகன் ஜோயல் செல்போன் பார்த்தபடி விளையாடி கொண்டிருந்தான். ஜோயல் சிறிது நேரத்தில், ரயில் நிலைய காத்திருபோர் அறையை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது, அந்த குழந்தையை யாரோ ஒரு மர்மநபர் கடத்தி சென்றுள்ளார்.

இதற்கிடையில், காத்திருப்போர் அறையில் மகன் இல்லாததைக் கண்டு சிந்தலா சன்னி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, ரயில் நிலையத்தில் பல இடங்களில் குடும்பத்தினருடன் தேடினார். இருப்பினும், ஜோயல் கிடைக்கவில்லை. இதையடுத்து, எழும்பூர் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து தேடினர்.

மேலும், சென்ட்ரல், தாம்பரம் உள்பட எல்லா ரயில் நிலைய போலீஸாருக்கும் குழந்தையின் புகைப்படம் மற்றும் விவரத்தை போலீஸார் அனுப்பினர். இதையடுத்து, ரயில்வே போலீஸார் மற்றும் மாநகர போலீஸார் அந்த குழந்தையை தேடிவந்தனர்.

இந்நிலையில், பேசின்பாலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவன் நின்று கொண்டு இருப்பதை போலீஸார் பார்த்தனர். உடனடியாக, அந்த குழந்தையை மீட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு குழந்தை தொடர்பாக விசாரித்தபோது, கடத்தப்பட்ட குழந்தை ஜோயல் என்பது தெரியவந்தது. உடனடியாக, எழும்பூர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

எழும்பூர் ரயில்வே போலீஸார் மற்றும் சிந்தலா சன்னி ஆகியோர் அங்கு விரைந்து சென்று, குழந்தையை பெற்றுகொண்டனர். தனது பெற்றோரை பார்த்ததும், ஜோயல் கட்டியணைத்து கொண்டார். பிற்பகலில் கடத்தப்பட்ட குழந்தை ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டது. கடத்திய நபர் யார் என்பது தொடர்பாக, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து எழும்பூர் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE