நீலகிரி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை, கடந்த இரு ஆண்டுகளாக வன்கொடுமை செய்துவந்த நபர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து காவல் துறையில் புகார் கொடுத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணயில், நீலகிரியைச் சேர்ந்த சேகர் என்பவர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. 50 வயதான சேகர் நர்சரி வைத்துள்ளார். பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்தச் சிறுமியை அவ்வப்போது காரில் கொண்டுவந்து பள்ளியில் விட்டுள்ளார். பெற்றோரும் தந்தை வயதுள்ளவர் என்பதால் சிறுமியைக் காரில் அனுப்பிவந்தனர்.
ஆனால் அந்தச் சிறுமியைக் கடந்த இரு ஆண்டுகளாகவே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் சேகர். இதுகுறித்து விசாரித்த போலீஸார் சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதேபோல் சிறுமியின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நலக் குழும அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.