டெல்லி அருகே, ஷோரூம் ஒன்றின் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபர், ஷோரூம் முன்னர் துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லியில், பாவனா காவல் சரகத்துக்குட்பட்ட தரியாபூர் பகுதியில், ஷோரூம் ஒன்று இயங்கிவருகிறது. இந்நிலையில், அந்தப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் இருவர் வந்தனர். இருவரும் தங்கள் முகத்தை துணியால் மூடியிருந்தனர். ஒருவர் பைக்கிலேயே அமர்ந்திருந்தார். ஷோரூம் முன்னர் நின்ற மற்றொரு நபர் வானை நோக்கித் துப்பாக்கியால் பல முறை சுட்டார்.
பின்னர் ஷோரூமுக்குள் நுழைந்த அவர் சில வினாடிகளில் அங்கிருந்து வெளியேறினார். தயாராக இருந்த பைக்கில் ஏறி அவரே ஓட்டிச்சென்றார். அதுவரை பைக்கில் காத்திருந்த நபர், பின் இருக்கையில் அமர்ந்துகொண்டார். இந்தக் காட்சிகள் ஷோரூமின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன. இந்தச் சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ஷோரூம் உரிமையாளரிடம் 50 லட்சம் ரூபாய் கேட்டு அவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அவரை அச்சுறுத்தவே இந்தச் செயலை அவர்கள் செய்திருப்பார்கள் என டெல்லி போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.