கோவை ஆவாரம்பாளையத்தில் முகமூடிக் கொள்ளையன்: பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை மாநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ஆவாரம்பாளையம். இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஷோபா நகர் சாலை வழியாக, ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து எஃப்.சி.ஐ குடோன் சாலை, கணபதிக்கு செல்வதற்கான சாலைகள் செல்கின்றன.

ஷோபா நகர் சாலை, சுரங்கப்பாதை அருகேயுள்ள அபிராமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கையில் ஆயுதத்துடன், மர்ம நபர் ஒருவர் நடமாடினார். அவர் தனது முகம் வெளியே தெரியாமல் இருக்க முகத்தை மூடிக் கொண்டு, கையில் கையுறைகளை அணிந்து இருந்தார்.

தொடர்ந்து அபிராமி நகரில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்துக்குள் நுழைந்த அந்த மர்ம நபர் அங்கிருந்த ஊஞ்சல் கம்பியை பயன்படுத்தி சிசிடிவி கேமராவை உடைத்தார்.

தொடர்ந்து தான் கொண்டு வந்த பழுக்க காய்ச்சப்பட்டிருந்த உளியை பயன்படுத்தி கதவுடன் இணைக்கப்பட்டிருந்த தாழ்களை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நல்வாய்ப்பாக, அந்த வீட்டின் உரிமையாளர் உள்பக்கமாக வெறும் தாழ்களை மட்டும் மூடாமல், சாவியை போட்டும் பூட்டியிருந்தார். இதனால் மர்மநபரால் உடனடியாக அந்த கதவுப் பூட்டை உடைக்க முடியவில்லை.

சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு அந்த வீட்டிலிருந்த நபர்கள் எழுந்து லைட்டை சுவிட்ச் ஆன் செய்த போது, வெளிச்சம் வந்ததையடுத்து தான் கொண்டு வந்த பொருட்களை போட்டு விட்டு மர்மநபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

மர்மநபர் கதவுப் பூட்டை உடைத்துக் கொண்டிருந்ததால் அந்த வீட்டில் இருப்பவர்கள் உடனடியாக வெளியே வரமுடியவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்து கதவை திறக்க உதவினர். பின்னர், இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பீளமேடு போலீஸாரிடம் புகார் அளித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆவாரம்பாளையம் பகுதி மக்கள் கூறும்போது, “இப்பகுதில் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. கொள்ளையன் இந்ததண்டவாளப் பகுதி வழியாக தப்பியிருக்க வேண்டும். கொள்ளையனை பிடிக்க போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதிகளில் இரவு ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE