திண்டுக்கலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கரோனா நோயாளி திடீர் என தப்பியோடினார். அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றின் தீவிரம் இப்போது கட்டுக்குள் உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் 20-க்கும் குறைவான நோயாளிகளே இப்போது அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று மட்டும் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், அங்கு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
இங்கு அனுமந்தன் நகரைச் சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர் கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அவர் நேற்று மாலை திடீரென மருத்துவமனையில் இருந்து மாயமானார். அவர் வீட்டிற்கும் செல்லவில்லை. இதுகுறித்து மருத்துவனை டீனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. டீன் திண்டுக்கல் சுகாதாரத்துறைக்கு இதுகுறித்துத் தகவல் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து மாயமான அந்தப் பெண் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.