கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், குளத்துப்பாளையத்தச் சேர்ந்தவர் கனகராஜ்(38) பெயிண்டர் வேலை செய்துவந்த இவருக்கு சாந்தி என்னும் மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். கனகராஜூம், அவரது நண்பர் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வெங்கடேஷ்(31) ஆகியோர் பொள்ளாச்சி மில் ரோட்டில் உள்ள லாரி அசோசியேசன் முன்பு மது அருந்தினர்.
குடித்துக்கொண்டு இருக்கும் போதே வெங்கடேஷ் தன் செல்போன் மற்றும் பாக்கெட்டில் இருந்த பணத்தைக் காணவில்லை என கனகராஜிடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த வெங்கடேஷ், அப்பகுதியில் இருந்து ஒரு கல்லை தூக்கி கனகராஜின் தலையில் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கனகராஜ் மயங்கினார். இதைப் பார்த்து பயந்துபோன வெங்கடேஷ் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த கனகராஜை அப்பகுதியினர் பார்த்துவிட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கனகராஜ் அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் பரிதாபமாக உயிர் இழந்தார். மது போதையில் நண்பரே தலையில் கல்லை தூக்கிப்போட்டு கனகராஜை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.