வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவர், தேர்வில் சிறப்பாக செயல்படமாட்டார் அல்லது சாதாரணமாக நடந்து கொள்ளமாட்டார் என்று கருதக்கூடாது என மும்பை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஒருவர் சவுதி அரேபியாவில் கப்பலில் பணிபுரிந்தார். அவர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மும்பையில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்திக்க வீட்டுக்கு வருவார். 2014 ம் ஆண்டில் அவர் வீட்டில் இருக்கும்போதெல்லாம், அவர்களது மகள் அவரைத் தவிர்த்துவிட்டு தனது அறையில் தங்கியிருப்பதை அவரது மனைவி கவனித்தார். இது தொடர்பாக மகளிடம் விசாரித்தபோது தந்தையே மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் தாய்க்கு தெரியவந்தது.
தனது பத்து வயதிலிருந்தே, கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமி தனது தாயிடம் கூறினார். இதனையடுத்து அவர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மும்பையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ஜெய்ஸ்ரீ ஆர் புலேட், குற்றவாளிக்கு செப்டம்பர் 29 அன்று பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். இந்த வழக்கின் விரிவான உத்தரவு புதன்கிழமை கிடைத்தது.
அந்த நபரை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், பாலியல் தொந்தரவு தொடங்கியபோது சிறுமிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 9 ம் வகுப்பில் பாலியல் கல்வி வகுப்பில் கலந்து கொண்டபோதுதான், தான் பாலியல் வன்கொடுமை செய்யபடுவதை உணர்ந்தார். அப்போதும் கூட, தன் தந்தை சிறைக்குச் சென்றால் குடும்பத்திற்கான நிதி உதவியை இழக்க நேரிடும் என்ற கவலை அவளுக்கு இயல்பாகவே இருந்தது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். குற்றவாளி தனக்கும் தனது சகோதர்களுக்கும் புதிய ஆடைகள் மற்றும் பொம்மைகளை அடிக்கடி கொண்டு வந்ததாகவும் அந்த சிறுமி கூறியிருந்தார்.
சிறுமி 9 ம் வகுப்பில் சராசரியாக 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றதாகவும், தவறாமல் பள்ளிக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒவ்வொருவரின் எதிர்வினையும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியாது என்றும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர் வழக்கமாக பள்ளி வரமாட்டார் என்றும் கருதக்கூடாது என நீதிமன்றம் கூறியது.