பைக்கில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.53 லட்சம் பறிமுதல்

By KU BUREAU

ராமநாதபுரம்: பரமக்குடியில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.52.92 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், 3 பேரைப் பிடித்து வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள காந்தி நகர் சோதனைச் சாவடியில் நேற்று மதுவிலக்குப் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சோதனைச்சாவடி அருகே இருவர் 2 பைகளைக் கைமாற்றியதைப் பார்த்தனர்.

இதில் சந்தேகம் அடைந்த போலீஸார் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூரைச் சேர்ந்த பிரபாகரன் (27), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள வளையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கவிதாஸ் (30) என்பதும், அவர்கள் வைத்திருந்த பைகளில் ரூ.52.92 லட்சம் ஹவாலா பணம் வைத்திருந்ததும் தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து, எமனேஸ்வரம் போலீஸில் ஒப்படைத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன் மற்றும் போலீஸார், பிடிபட்ட இருவரிடமும் விசாரித்தனர். இந்த பணப் பரிமாற்றத்தில் இளையான்குடி புதூரைச் சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும் பிடித்து விசாரித்தனர்.

பிரபாகரன் இளையான்குடியில் நகைக்கடை நடத்தி வருவதாகவும், வாரத்துக்கு ஒருமுறை கவிதாஸிடம் அதிக அளவில் பணம் கொடுத்து, பரமக்குடியில் உள்ள சிலரிடம் பிரித்துக் கொடுக்கச் சொல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, ரூ.52.92லட்சம், செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீஸார், பணத்தையும், பிரபாகரன், கவிதாஸ், பன்னீர் ஆகியோரையும் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE