மதம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு: இளம் பெண் மருத்துவர் அதிரடி கைது!

By காமதேனு

மதம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய இளம் பெண் மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணை அடுத்துள்ள நன்மங்கலம் பலராமன் தெருவை சேர்ந்தவர் இமானுவேல்(40). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் மதுஷியா(28) என்ற பெண்மணி தன்னை பற்றியும், தான் சார்ந்துள்ள மதம் பற்றியும், சமூக வலைதளத்தில் அவதூறான செய்திகளை பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இலங்கையை சேர்ந்த மதுஷியா, பெங்களூருவில் கணவர் அபினவ் குமார் சிங்குடன் வசித்து வருவதும், ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், மதுஷியா பதிவிட்ட வீடியோக்களில் பெரும்பாலானவை, கிர்கிஸ்தான் நாட்டிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர் விசாரணையில் சிவகாசியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே போலீஸார் மதுஷியாவை கைது செய்து சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் இமானுவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுஷியாவை ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தி, பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE