பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு: 10 பேரின் ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By காமதேனு

கும்பகோணம் அருகில் மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை தட்டிகேட்டதற்காக பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் மதமாற்றத்தை தட்டிக் கேட்டதாக பாமக பிரமுகர் ராமலிங்கம், கடந்த 2019 பிப்ரவரி 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன் உள்பட 18 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், 13 பேரை கைது செய்தனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன் உள்ளிட்ட10 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, வழக்கில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணையை துவங்காமலும், விசாரித்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தாமலும் தாமதித்துள்ளதாக சுட்டிக்காட்டினர்.

சாட்சிகள் விசாரணை முடிந்தால் உடனடியாக குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை கீழமை நீதிமன்றம் புறக்கணித்துள்ளதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதேநிலை நீடித்தால் வழக்கில் சாட்சி விசாரணை முடிய மேலும் 10 ஆண்டுகள் ஆகும் என தெரிவித்தனர்.

தாமதமில்லாமல் பாதுக்காக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணையையும், மற்ற சாட்சிகளின் குறுக்கு விசாரணையையும் விரைந்து முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முதலில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளை விசாரிக்க வற்புத்த மாட்டோம் என கூறிய குற்றம்சாட்டப்பட்ட தரப்பு, தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை என்ற காரணத்தையே கூறி, ஜாமீன் கேட்க முடியாது என கூறி, 10 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE