இரும்பு தடுப்பு விழுந்து பெண் தொழிலாளி பலி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

By KU BUREAU

சென்னையில் கட்டுமான நிறுவனத்தின் தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு போர்டு விழுந்து வடமாநில பெண் தொழிலாளி உயிரிழத்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தரமணி அருகே டிஎல்எப் கட்டுமான நிறுவனம் சார்பில் புதிதாக அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கட்டுமான பணி நடைபெறும் பகுதிக்கு வெளியாட்கள் வராமல் இருப்பதற்காக இரும்பு போர்டுகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த பகுதியில் பலத்த காற்று வீசிக் கொண்டிருந்தது.

அப்போது தடுப்பிற்காக வைக்கப்பட்டு இருந்த இரும்பு போர்டு ஒன்று திடீரென சரிந்து விழுந்து விபத்திற்கு உள்ளானது. அதே சமயம் அந்த வழியாக சென்று கொண்டிருந்த வடமாநில பெண் தொழிலாளி ஒருவர் மீது இந்த இரும்பு போர்டு விழுந்ததில், அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை அந்த பெண் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தரமணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் ரேணுகா (30) என்பதும், வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியின் அருகே உள்ள நிறுவனம் ஒன்றில் ஹவுஸ்கீப்பராக அவர் வேலை பார்த்து வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE