விளம்பர நோக்கத்தில் சொந்த வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசுவதாகத் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, “திண்டுக்கல்லில் 24 ம் தேதி அதிகாலை 3 மணிக்கு பால்ராஜ் என்பவரது இடத்தில் ஒரு கார், 5 டுவீலர்கள் எரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்றே திண்டுக்கல் நகர காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் இன்று சிக்கந்தர்(29) என்னும் முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டார். இதில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது எனவும் அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
தென்மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மதுரையில் மட்டும் 1500 போலீஸார் இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். டி.ஜி.பி, எஸ்.பி நிலையில் இரவு ரோந்துப் பணி நடக்கிறது. அதேபோல் டி.எஸ்.பி நிலையிலான காவலர்கள் முக்கிய நபர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டம் நடத்தி வருகிறோம். வன்முறையில் ஈடுபடுவோர் மீது தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுப்போம். இராமநாதபுரம் குண்டுவீச்சு தொடர்பாகவும் விசாரணை நடத்திவருகிறோம். சிலர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பாட்டிலில் பெட்ரோல் விற்க வேண்டாம் எனவும் இடைக்காலமாக அறிவுறுத்தியுள்ளோம். கன்னியாகுமரி பெட்ரோல் குண்டுவீச்சு இன்று அதிகாலையில் தான் நடந்தது. அதுகுறித்தும் விரைவில் முழுவிபரமும் தெரியவரும். பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் வீடு, கடை, அலுவலகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு போட்டுள்ளோம்.தங்கள் வீடுகளிலேயே யாரும் விளம்பர நோக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசினால் கடுமையாக நடவடிக்கை எடுப்போம்.”என்றார்.