ஒரு கையில் பீடியை பிடித்தவாறே இன்னொரு கையில் கேனில் இருந்த பெட்ரோலை டூவீலருக்கு ஊற்றிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், வாலிப்பாறையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(38) இவரது மனைவி பிரபா. இந்தத் தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். ராஜேந்திரன் தன் மனைவி மற்றும் மகன்களுடன் தம்மக்குண்டுவில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தார். வழியில் டூவீலரில் பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் நின்றது. ஒரு வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி வந்தவர், ஒரு கையில் பீடியைப் பிடித்துக்கொண்டே, இன்னொரு கையால் பெட்ரோலை ஊற்றினார். அப்போது, பீடியில் இருந்து தீப்பொறி பறந்து பெட்ரோலில் விழுந்தது. இதில் நொடிப்பொழுதில் தீப்பற்றியது. இதில் ராஜேந்திரன் மீது தீப்பற்றி அலறித் துடித்தார்.
உடனே அக்கம், பக்கத்தினர் ராஜேந்திரனை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீடியை பிடித்துக்கொண்டே பெட்ரோல் போட்ட வாலிபர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.