இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை: லஞ்சப்பணம் ரூ.87,500 பறிமுதல்!

By KU BUREAU

தேனி அருகே இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் 6 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 87 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரைப் பகுதியில் இணைச் சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. நேற்று ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த தினத்தையொட்டி காலை முதல் இங்கு அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெற்று வந்த நிலையில், பலரிடம் லஞ்சப் பணம் பெறுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மாலை 4 மணிக்கு துவங்கிய சோதனை இரவு 10 மணி வரையிலும் நடைபெற்றது. சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையின் போது, இணை சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத 87 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த பத்திரப்பதிவு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனைக்குப் பின்னர் இணை சார் பதிவாளர் பரமேஸ்வரி, அலுவலக உதவியாளர்கள் 2 பேர் உட்பட 3 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE