பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொலை: பட்டியலினச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

By காமதேனு

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் உள்ள மதோதண்டா பகுதியில் இருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின்னர் தீவைக்கப்பட்ட பட்டியலினச் சிறுமி, 12 நாட்களுக்குப் பிறகு நேற்று லக்னோவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அச்சிறுமி நேற்று உயிரிழந்ததாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் பிரபு தெரிவித்தார். உறவினர்கள் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்குப் பின் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமத்தில் அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7ம் தேதி, மதோதண்டா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், ராஜ்வீர் மற்றும் தாராசந்த் என்ற இரண்டு ஆண்கள் 16 வயது பட்டியலினச் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் சிறுமியின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தனர். அவர் லக்னோவில் 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்ததாக எஸ்.பி தினேஷ் குமார் பிரபு கூறினார். இந்த எஃப்ஐஆரில் இப்போது கொலைக் குற்றச்சாட்டு சேர்க்கப்படும் என்றும், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE