ஒசூர் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை: ரூ.2.89 லட்சம் பறிமுதல்!

By கி.ஜெயகாந்தன்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநில எல்லையில் அமைந்துள்ள ஜூஜூவாடி மற்றும் நல்லூர் சோதனைச் சாவடிகளில் வெளி மாநிலங்களிலிருந்து வரும் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறது. சோதனையின் போது போக்குவரத்துத் துறையினர், ஆவணங்களை சரிபார்க்கின்றனர். இதே போல், தமிழகத்திற்குள் வரும் வெளி மாநில வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்த இரண்டு சோதனைச் சாவடிகளிலும் பணியாற்றும் அலுவலர்கள், வாகன ஓட்டிகளிடம் பெருமளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார்கள் சென்றன. இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த சோதனைச் சாவடிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 5ம் தேதி ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 25 ஆயிரத்து 950 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் நல்லூர் சோதனைச் சாவடி ஓசூர் - கோலார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த சோதனைச் சாவடியில் இன்று காலை டிஎஸ்பி வடிவேல் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரொக்கமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் சேண்டல் உப்ரேசிய மேரி மற்றும் அங்கிருந்த பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE