போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பரபரப்பு: ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்!

By KU BUREAU

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பிடிபட்ட வழக்கில் பிரபல சினிமா தயாரிப்பாளரும், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மெத்தபட்டமைன் மற்றும் சூடோபெட்ரொம் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரும், பிரபல தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மார்ச் 9-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில், ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான நிலையில், ஜாபர் சாதிக்குக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். செல்போன் எண்ணை விசாரணை அதிகாரிக்கு வழங்கி அதை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். முகவரி மாறினால் அது குறித்த விவரத்தையும் விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜாமீன் தொகையாக ரூ.1 லட்சமும், தலா ரூ.1 லட்சத்துக்கு இருவரின் ஜாமீனையும் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் வழக்கில் ஜாமீன் பெற்றிருந்தாலும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் திகார் சிறையில் வைத்து ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர் சிறையில் இருந்து வெளி வரமுடியாத நிலையில் உள்ளார். மேலும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE