நிலம் மறுவரையறை: ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது!

By KU BUREAU

நீலகிரி மாவட்டம் கூடலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். வருவாய் துறை சம்பந்தப்பட்ட வேலைகள் மற்றும் சிட்டா, பட்டாவில் பெயர் சேர்த்தல், நீக்குதல், கட்டிட விரிவாக்கப் பணி, கட்டிடம் கட்டும் பணி ஆகியவற்றிற்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணிகள் நடப்பதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டது. தாசில்தாராக பதவி வகித்து வரும் ராஜேஸ்வரி என்பவர், ஒவ்வொரு பணிக்கும் லஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட தோட்டமூலா பகுதியில் வசிக்கும் உம்முசல்மா என்பவர், தனக்கு சொந்தமான நிலத்தை மறு வரையறை செய்வதற்காக கூடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். நீண்ட நாட்களாக இந்த விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், உம்முசல்மா வட்டாட்சியர் ராஜேஸ்வரியை நேரில் சந்தித்து இப்பணிகளை விரைந்து முடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வழங்கினால், இந்த பணியை முடித்து தருவதாக ராஜேஸ்வரி கூறியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த ராஜேஸ்வரியிடம் உம்முசல்மா 20 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் காரணமாக கூடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE