கள்ளச்சாராயம் அருந்திய 3 பேர் மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதி: மழுவங்கரணையில் சாராயம் விற்றவர் கைது

By KU BUREAU

மதுராந்தகம்: சித்தாமூரை அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் சாராயம் தயாரித்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், அதனை அருந்திய 3 பேரைமதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் கிராமங்களில் சாராயம் விற்பனை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என விஏஓ.க்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூரை அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் வசிப்பவர் தேவன். விவசாய தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் தனக்கு சொந்தமான விளை நிலத்தில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சியதாகவும், இதனை, தனது விவசாய நிலத்தில் கூலிக்கு பணிசெய்யும் 3 பேருக்கு விற்பனை செய்ததாகவும் தெரிகிறது.அவர்களும் அதை அருந்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, தகவல் அறிந்த மதுராந்தகம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் மற்றும்சித்தாமூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேவனிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது விளை நிலத்தில் மறைத்து வைத்திருந்த ஊரல்கள், பேரல்களை கண்டறிந்தனர். இதையடுத்து, அவரை கைது செய்தனர்.

மேலும், சாராயம் அருந்திய 3 பேரையும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர், சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசுமருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைத் தொடர்ந்துகிராமப்பகுதியில் சுகாதாரத் துறைசார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து அனைவருக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.

மேலும், சாராயம் விற்பனைகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் மற்றும் எஸ்பி சாய்பிரனீத் ஆகியோர் கூட்டாக, மழுவங்கரணை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

போலீஸார் அனைத்து பகுதிகளிலும் ரோந்து மற்றும்சோதனைகள் மேற்கொண்டு, மாவட்ட காவல் நிர்வாகத்துக்கு அறிக்கை வழங்க வேண்டும் என எஸ்பி அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆய்வின்போது, மதுராந்தகம் கோட்டாட்சியர் தியாகராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE