சட்டவிரோத கல்குவாரி பற்றி புகாரளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றிக் கொலை: அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்

By காமதேனு

கல்குவாரி குறித்து புகாரளித்த சமூக ஆர்வலர் மீது லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் மாவட்டம் கரூர்குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்த ஜெகநாதன் என்ற சமூக ஆர்வலர் கொடூரமான முறையில் சரக்குந்து ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக போராடிய ஒருவரை கொல்லத் துணிகிறார்கள் என்றால், அவர்களுக்கு வலிமையான பின்னணி இருப்பதாகவே தோன்றுகிறது. அது குறித்து விசாரணை நடத்துவதுடன், ஜெகநாதனின் படுகொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்

கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதனின் குடும்பத்திற்கு பா.ம.க. சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; அத்துடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்

கரூர் தென்னிலை அருகே செல்வகுமாருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.இந்தக் கல்குவாரி, உரிமம் முடிந்து இயங்கி வருவதாக கனிம வளத்துறைக்கு ஜெகநாதன் புகார் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து, மூன்று தினங்களுக்கு முன்பாக செல்வகுமாரின் கல்குவாரி சட்ட விரோதமாக இயங்கியதால் மூடப்பட்டது.

இந்தச் சூழலில் நேற்று முன்தினம் இரவு க.பரமத்தி அருகே கருடயம்பாளையம் என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜெகநாதன் மீது தனியார் கல்குவாரிக்குச் சொந்தமான வேன் மோதியது. இதில் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோதிய வேன் செல்வகுமாருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

இதனிடையே ஜெகநாதன் மனைவி ரேவதி அளித்தப் புகாரின் அடிப்படையில், சேலம் ஓமலுாரை சேர்ந்த வேன் டிரைவர் சக்திவேல், ராணிப்பேட்டை காவனுாரை சேர்ந்த ரஞ்சித், அன்னை புளூ மெட்டல் உரிமையாளர் செல்வகுமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE