பீட்ரூட் பொரியலில் எலி தலை: அதிர்ச்சி கிளப்பிய ஆரணி சைவ உணவகம்!

By காமதேனு

ஆரணி பகுதியில் துக்க நிகழ்விற்கு ஆர்டர் செய்த உணவில் எலி தலை இருந்ததால் உறவினர்கள் அந்த உணவகத்தின் முன்பு திரண்டு போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

ஆரணி, காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவரது உறவினர் சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரின் துக்க நிகழ்விற்கு உணவு படையலிடுவதற்காக ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சைவ உணவகத்தில் ஆர்டர் கொடுத்துள்ளனர். அதன்படி அந்த உணவக நிர்வாகத்தினர் வாகனம் மூலம் அந்த வீட்டுக்கு உணவை அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து அந்த உணவு படையலிடப்பட்டு, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்குப் பரிமாறப்பட்டு அனைவரும் சாப்பிட்டனர். அதன்பின்னர் மீதமான உணவுகளை வேறு பாத்திரத்திற்கு மாற்றியபோது, உணவகத்தில் வழங்கிய பீட்ரூட் பொரியலில் எலி தலை ஒன்றின் துண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அந்த உணவக உரிமையாளருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இதுகுறித்து கண்டு கொள்வதாக இல்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த முரளி மற்றும் அவரது உறவினர்கள் எலி தலை கிடந்த பொரியலுடன் அந்த உணவகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் உணவகத்தின் வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ஆரணி போலீஸார் சாலை மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்தி, காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த உணவகத்திற்குச் சென்று உணவு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தி எடுத்துச் சென்றனர். சைவ உணவகத்தில் கொடுக்கப்பட்ட உணவில் எலி தலை இருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE