சென்னையில் கடந்த 18 ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகளில் இதுவரை 8 கொலை வழக்கில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள டிராஃபிக் வார்டன் அலுவலகத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 142 வார்டன்களை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்க முடிவு செய்து அதற்கான அலுவலகத்தை காவல் ஆணையர் அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
முதலமைச்சர் உத்தரவின் பேரில் சாலை விபத்துகளை குறைக்க சிறப்பு அதிரடிப் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சிறப்பு படையில் பொறியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை, ஐஐடி மாணவர்கள் உட்பட 6 ஏஜென்சிகள் இணைந்து செயல்பட உள்ளதாக கூறினார். மேலும் சென்னையில் அதிக விபத்துகள் ஏற்படும் 104 இடங்களை இந்த குழு கண்டறிந்துள்ளதாகவும், அவ்வாறு கண்டறியப்பட்ட இடங்களில் விபத்து ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதனை சரி செய்யும் பணிகளில் இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றாண்டுகளை ஒப்பிடுகையில் இந்தாண்டு ஆகஸ்டு மாதம் வரை 20% சாலை மரணங்கள் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும், சென்னையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை நடைபெற்ற கொலை வழக்குகளில் இதுவரை 8 கொலை வழக்குகளில் குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் உள்ளதாகவும், இந்த வழக்குகளை அதிதீவிர ரவுடிகள் குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். Dare ஆப்ரேஷன் நடவடிக்கையினால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 20% கொலை குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், பிராங்க் தொடர்பான புகார்கள் வந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டால் அவர் மீது சட்டப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.