பதவிக்காக வயதை 6 ஆண்டுகள் குறைத்து மோசடி: போலீஸிடம் வசமாக சிக்கிய நீதிபதி

By காமதேனு

மத்தியப் பிரதேசத்தின் மாவட்ட நீதிபதி ஒருவர் தனது வயதை ஆறு ஆண்டுகள் குறைத்து மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் கட்னி மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட ராதேஷ்யாம் மடியா, மோசடி குற்றச்சாட்டு காரணமாக கடந்த ஜூன் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் நீதிபதியாக தகுதி பெற வேண்டும் என்பதற்காக பிப்ரவரி 10, 1960 ல் இருந்து பிப்ரவரி 10, 1966 க்கு தனது பிறந்த தேதியை மாற்றி 6 வயதை குறைத்து காண்பித்து மோசடி செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நிர்வாக அதிகாரி விபின் சந்திர குப்தா அளித்த புகாரின் பேரில், ஜபல்பூர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் ரமேஷ் கவுரவ் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “நீதிபதியாவதற்காக ராதேஷ்யாம் மடியா தனது பிறப்புச் சான்றிதழை மாற்றியதாக நிர்வாக அதிகாரி தெரிவித்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரை விசாரித்த பிறகு தேவைப்பட்டால் முன்னாள் நீதிபதி கைது செய்யப்படுவார்.” என தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE