அங்கித் - அங்கிதா கொலைகள்: கலவர அச்சத்தில் வட மாநிலங்கள்

By எஸ்.எஸ்.லெனின்

உத்தர பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற 2 கொலைகள் வட மாநிலங்களில் இருவேறு பிரிவினர் இடையே கலவர அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

அங்கித் கொலை வழக்கு

உத்தர பிரதேசம் மாநிலம் பஸ்தீ மாவட்டத்தில் நடந்த ஒரு ஆணவக்கொலை அம்மாநிலத்தின் பதற்றச் சூழலுக்குக் காரணமாகி உள்ளது. அங்கித் கௌதம் என்ற இளைஞனின் நிர்வாண சடலம் கிராமத்தின் கரும்புக் காட்டில் ஆகஸ்ட் 28-ல் அடையாளம் காணப்பட்டது. அங்கித் அலைபேசியில் கடைசியாக அழைத்த எண்ணின் அடிப்படையில் அதே ஊரில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பத்தை போலீஸார் அணுகினர். விசாரணையின் ஊடே அந்த வீட்டில் மற்றுமொரு அசம்பாவிதம் நடந்திருப்பதாகவும் காவல் துறையினர் சந்தேகமடைந்தனர்.

கிடுக்கிப்பிடி விசாரணையின் முடிவில் இஸ்ராத், இஸ்ரார், இர்ஃபான் என 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். தங்களின் தங்கை அமீனாவை காதலித்ததாக இளைஞர் அங்கித்தை ஆகஸ்ட் 26 அன்று இரவு அடித்துக் கொன்றதாக 3 சகோதர்களும் ஒப்புக்கொண்டனர். அதே இரவில் தங்கை அமீனா தற்கொலை செய்துகொண்டதாகவும், காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்காது அடக்கம் செய்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அந்தப் பெண்ணையும் அவளது சகோதரர்கள் ஆணவக் கொலை செய்திருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் அமீனாவின் சடலத்தை திங்கள்கிழமை (ஆக.29) போலீஸார் தோண்டியெடுத்து உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

அங்கித் சடலம் கண்டெடுக்கப்பட்ட கரும்பு வயல்

இருவேறு சமூகங்களுக்கு இடையிலான காதல் விவகாரத்தின் முடிவில், இந்து இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஸ்தீ மாவட்டத்தில் கலவரச் சூழலுக்கு வித்திட்டது. இறந்த அங்கித் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் கூடுதல் பிரிவுகளின் கீழ் கொலையாளிகள் மூவரையும் போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர். ஆனால் அங்கித் சார்பாக போராட்டத்தில் குதித்தவர்களால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அங்கிதா கொலை வழக்கு

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் அங்கிதா சிங் என்ற பிளஸ் 2 மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக ஷாருக் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டின் தனியறையில் தூங்கிக்கொண்டிருந்த அங்கிதா மீது, ஆகஸ்ட் 23 அதிகாலையில் பெட்ரோல் வீசி எரித்துள்ளார் ஷாருக். தனது காதலை மறுத்ததால் ஷாருக் இவ்வாறு செய்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். ஆனால் அங்கிதா - ஷாருக் இருவரும் ஜோடியாக தோன்றும் படங்களை பரப்பி வரும் சிலர் அங்கிதா மரணத்தில் பக்க கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அங்கிதா

90 சதவீத காயங்களுடன் மருத்துவனையில் உயிருக்குப் போராடிய அங்கிதா சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 28 அன்று பரிதாபமாக இறந்தார். சாகும் முன்னர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் மரண வாக்குமூலம் தந்துள்ளார். ’எனக்கு நேர்ந்த வேதனை குற்றவாளிக்கும் தரப்பட வேண்டும்’ என்ற குமுறலுடனான அங்கிதாவின் வீடியோ சமூக ஊடகங்களில் கொதிப்புடன் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு போட்டியாக கைது செய்யப்பட்ட ஷாருக் குற்ற உணர்ச்சி எதுவுமின்றி சிரித்த முகத்துடன் போலீஸ் விசாரணைக்குச் செல்லும் வீடியோவும் பரப்பப்படுகிறது.

அரசியல் களேபரம்

மாநிலத்தில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மையின் மத்தியில், குதிரை பேர அச்சம் காரணமாகத் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஊர் ஊராகப் பதுங்கி வருகிறார். தங்களுக்குப் போக்குகாட்டும் ஹேமந்த் சோரன் மீது காழ்ப்பிலிருக்கும் பாஜக, அங்கிதா கொலையை தீவிர அரசியலாக்கி வருகிறது. பஜ்ரங் தள் அமைப்பின் போராட்டங்களால் தும்கா மாவட்டத்தில் இயல்புநிலை கெட்டிருக்க, அங்கே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அங்கிதா - ஷாருக் பெயரில் பரவும் படங்கள்

மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பாபுலால் மராண்டி, வங்கதேச ஆதரவு தீவிரவாதிகளால் ஜார்க்கண்ட் மாநிலம் லவ் ஜிகாத் அச்சத்துக்கு ஆளாகி இருப்பதாகக் குற்றம்சாட்டி வருகிறார். இதற்கிடையே அங்கிதா கொலைவழக்கில் தொடர்புடையதாக நயீம் கான் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உதவியதாக நூர் முஸ்தபா என்ற போலீஸ் டிஎஸ்பி பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

துரித விசாரணை மற்றும் நிதியுதவிக்கு உத்தரவிட்டதுடன் கட்சி எம்எல்ஏக்களுடன் பாதுகாப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது அடைக்கலமாகி உள்ளார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்.

2 மாநிலங்களில் எகிறும் பதற்றம்

அங்கித் - அங்கிதா என இரு கொலை சம்பவங்களில், தொடர்புடைய உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் என இரு மாநிலங்களிலும் கலவர அச்சத்திலுள்ள மாவட்டங்களில் கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசியமான பகுதிகளில் உள்ளூர் ஆட்சியாளர்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளனர். கணேஷ் சதுர்த்தி வழிபாடு மற்றும் விசர்ஜனம் என்றாலே வட மாநிலங்களைக் கலவரக் காய்ச்சல் அச்சுறுத்தும். இவற்றில் இருவேறு பிரிவினருக்கு இடையே பதற்றத்தை விளைவிக்கும் இந்தக் கொலைச் சம்பவங்களை முன்வைத்து, அதற்கு முந்தைய அசம்பாவிதங்கள் தொடர்பான செய்திகளை மீண்டும் தோண்டி பரப்பி வருகிறார்கள். இதனால் வட மாநிலங்களின் வழக்கமான பதற்ற ஏரியாக்களில் பொதுமக்கள் மத்தியிலான அச்சமும் கவலையும் அதிகரித்துள்ளது.

குஜராத் பில்கிஸ் பானுவுக்கு நீதி கேட்டுக் குரல் கொடுத்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், இந்துக்கள் கொலையானபோது கண்களை மூடிக்கொண்டிருப்பதாக பாஜக கடுமையாக சாடி வருகிறது. ஜார்க்கண்ட் அங்கிதா கொலைக்குக் கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளார். தனிப்பட்டோர் விவகாரங்களாக சட்டத்தின் பார்வையில் தீர்வு காணப்பட வேண்டிய கொலை வழக்குகள், வழக்கமாக பதற்றம் சூழும் சதுர்த்தி பண்டிகைக்கு சட்டம் ஒழுங்கு கவலைகளைச் சேர்த்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE