அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவிலிருந்து காண்டாமிருக கொம்புகளை கடத்தியதாக 3 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அசாமில் உள்ள கோலாகாட் மாவட்டத்தில் காண்டாமிருக கொம்பு வியாபாரத்தில் ஈடுபட்டதாக 3 பேரை வனத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்து இந்த காண்டாமிருக கொம்புகளை வேட்டைக்காரர்கள் கடத்தியுள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மாவட்ட வன அதிகாரி ரமேஷ் குமார் கோகாய், "குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் காசிரங்கா அருகே உள்ள பாக்மாரி பகுதியில் இருந்து பிடிபட்டார். அவரது வாக்குமூலத்திற்குப் பிறகு மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மயக்க மருந்து கொடுத்து கண்டாமிருகத்தின் கொம்பினை அறுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது” என தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து மே 9-ம் தேதி காசிரங்கா தேசிய பூங்கா அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. பூங்காவிற்குள் உள்ள முவாமாரி பகுதியில் 10 முதல் 12 வயதுக்குட்பட்ட ஆண் காண்டாமிருகம் ஒன்று கொம்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது. வேட்டைக்காரர்கள் காண்டாமிருகத்தை கொல்லாமல் கொம்பை வெட்டி அகற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தற்போது குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அசாமின் ஒராங் தேசிய பூங்காவில் காண்டாமிருகத்தின் கொம்பை அகற்றுவதற்காக வேட்டையாடுபவர்கள் ட்ரான்குவிலைசர்கள் எனப்படும் மயக்க மருந்துகளை பயன்படுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து அசாம் வனத்துறையினர் மாநிலத்தில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தைப் பாதுகாப்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.