காதலை ஏற்க மறுத்த சிறுமி; துப்பாக்கியை தூக்கிய 9ம் வகுப்பு மாணவன் - பிஹாரில் அதிர்ச்சி சம்பவம்

By காமதேனு

பிஹார் மாநிலம் பாட்னாவில் காதல் விவகாரம் காரணமாக 15 வயது சிறுமி கழுத்தில் சுடப்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாட்னா நகரில் உள்ள சிபாராவின் இந்திரபுரி பகுதியில் புதன்கிழமை இரவு 7:30 மணியளவில் அந்த சிறுமி பயிற்சி வகுப்பினை முடித்துவிட்டு திரும்பும் போது இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில், சிறுமியை பின்தொடர்ந்து வந்த ஒரு நபர், தனது பையில் இருந்து திடீரென துப்பாக்கியை வெளியே எடுத்து சுடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. பின்னர் அந்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார்.

முதற்கட்ட விசாரணையில், காதல் தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னரே உண்மையான காரணத்தை அறிய முடியும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

9ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி, தற்போது ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளி அடையாளம் காணப்பட்டாலும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE