பூங்காவில் சகோதரனுடன் விளையாடிய 6 வயது சிறுமி: பிஸ்கட் கொடுத்து வாலிபர் செய்த கொடுமை!

By காமதேனு

ஹரியானா மாநிலம் பானிபட்டில் 6 வயது பெண் குழந்தையை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பானிபட்டில் உள்ள வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் 6 வயதான சிறுமி, தனது இளைய சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் திங்கள்கிழமையன்று நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரிலிருந்து பணிக்காக அந்த சிறுமியின் குடும்பம் ஹரியானாவில் தங்கியிருந்தது. சகோதரனுடன் சிறுமி பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த போது, குற்றம்சாட்டப்பட்ட நபர் பிஸ்கட்டை கொடுத்து சிறுமியை வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர் அச்சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்று அருகே உள்ள வாய்க்காலில் வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். இந்த நிலையில் ஒரு நபர் தனது சகோதரியை அழைத்துச் சென்றதாக சிறுமியின் சகோதரர் குடும்பத்தினரிடம் சென்று கூறியுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அருகில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றவாளி குழந்தையைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, பானிபட்டில் உள்ள ஒரு தாபாவில் பணிபுரிந்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஈஸ்வர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு பின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE