முகத்தில் கடிபட்ட காயங்களுடன் சுற்றிய இளைஞர்: போக்சோ சட்டத்தில் தூக்கியது போலீஸ்

By காமதேனு

மகாராஷ்டிராவில் முகத்தில் கடிபட்ட அடையாளங்களுடன் இருந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் தானே நகர காவல்துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவின் தானே நகரில் உள்ள கோட்பந்தர் சாலையில் ஆகஸ்ட் 11ம் தேதி 17 வயது சிறுமி ஸ்கை வாக்கிங் சென்றபோது, மர்மநபர் ஒருவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த ஆணின் நடவடிக்கையை எதிர்த்து, பாதிக்கப்பட்ட சிறுமி அவனின் முகத்தில் கடித்து, அவனின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். பின்னர் சிறுமி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் அடையாளம் தெரியாத குற்றவாளி மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.

பின்னர் பல்வேறு போலீஸ் குழுக்கள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். குற்றவாளியின் முகத்தில் கடித்த தடயங்கள் இருக்கும் என்பது மட்டும் போலீசாரிடம் உள்ள தடயமாக இருந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மன்பாடா பகுதியில் உள்ள மனோரமா நகரில் வசிக்கும் தினேஷ் கவுட் (33) என்பவரை போலீஸார் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்டவரின் முகத்தில் உள்ள கடிபட்ட காயங்களின் அடிப்படையில் அவரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம் என வர்தக் நகர் பிரிவு காவல் உதவி ஆணையர் நிலேஷ் சோனாவனே தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE