ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் நகைகள், ரூ.48 லட்சம் கொள்ளை; 3 பேர் கைது!

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு மாவட்டத்தில் ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் நகை, ரூ.48 லட்சம் கொள்ளை போன வழக்கில், மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 பவுன் நகை மற்றும் ரூ.19 லட்சம் ரொக்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (69). ஆடிட்டரான இவர் கடந்த மாதம் 8-ம் தேதியன்று, தேனியில் நடைபெறும் தனது உறவினர் இல்ல திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அன்று இரவு, ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், 235 பவுன் நகை மற்றும் ரூ.48 லட்சத்தை கொள்ளையடித்து தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் ஈரோடு தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார், சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பகுதிக்கு ஒரு கார் வந்து சென்றதைக் கண்டறிந்தனர். மேலும், கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பழைய குற்றவாளி ஒருவருக்கு இந்தக் கொள்ளையில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், ஆடிட்டர் சுப்பிரமணியனின் கார் ஓட்டுநரான சத்யன் (34), திடீரென தலைமறைவானார். இதையடுத்து அவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்திய போலீஸார் சத்யனைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஆடிட்டர் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இவருடன் சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், திருமலை நகரைச் சேர்ந்த அருண்குமார் (36), வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (24) ஆகியோரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அருண்குமார், விக்னேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து 90 பவுன் நகை, ரூ.19 லட்சம் மற்றும் கொள்ளை அடிக்கப் பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து பேசிய போலீஸார், “இந்தக் கொள்ளை தொடர்பான விசாரணையில், செல்போன் டவர்களில் பதிவான எண்கள் மூலம், குற்றவாளிகளை நெருங்க முடிந்தது. இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்தவர்கள் மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையில் நேரடியாக ஈடுபட்ட நபர், செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார். விரைவில் அவரையும் கைது செய்வோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE