பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஊழியர்கள்!

By பெ.ஜேம்ஸ் குமார்

பல்லாவரம் அருகே திருநீர்மலை பகுதியில் செயல்பட்டு வந்த பிளாஸ்டிக் குடோன் ஒன்றில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அங்கு தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் 15 -க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பல்லாவரம் அருகே திருநீர்மலை, ஓய்யாளி அம்மன் கோவில் தெருவில் ராஜகோபால் மற்றும் ஜெயராஜ் ஆகியோருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்காக குவித்து வைப்பது வழக்கம். இந்த குடோனில் 20-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12.15 மணி அளவில் குடோனின் பழைய பொருட்கள் தேக்கி வைத்திருந்த இடத்திலிருந்து திடீரென குபுகுபுவென கரும்புகை கிளம்பியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக எச்சரித்ததால் அங்கு தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். அதற்குள்ளாக அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் தீ கட்டுக்குள் அடங்காமல் தொடர்ந்து எரிந்ததால் இது குறித்து உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க எவ்வளவோ போராடியும், தீ கட்டுக் கடங்காமல் சென்றது. இதனால் உதவிக்கு கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அசோக் நகர் மற்றும் மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

மொத்தம் 9 வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பிளாஸ்டிக் குடோன் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. குடோனிற்கு அருகில் வசித்து வரும் மக்கள் மூச்சு திணறலால் அவதியுற்றனர்.

இது குறித்து சங்கர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதிச் செயலா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE