சென்னை வங்கி கொள்ளை; திருடர்களைப் பிடித்தால் ஒரு லட்சம் - காவலர்களுக்கு சன்மானம் அறிவிப்பு!

By காமதேனு

சென்னையில் தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனத்தில் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்ற கொள்ளையர்கள் பிடிக்கும் காவலர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் வழங்கும் பெட் பேங்க் கோல்ட் லோன் நிறுவனத்தின் கிளை உள்ளது. இதில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் தனது கூட்டாளிகள் இருவருடன் கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து காவலாளியை கட்டிப்போட்டுவிட்டு, மேனேஜருக்கு மயக்க மருந்து கொடுத்து வங்கியில் இருந்த 20 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்து மூன்று பைகளில் நிரப்பி கொண்டு தப்பிச் சென்றனர்.
வங்கியின் மேலாளர் சுரேஷ் அளித்த தகவலின் பேரில் அரும்பாக்கத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வழிகளிலும், சென்னை மாநகரம் முழுவதிலும் காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

கொள்ளையடித்து விட்டு அவர்கள் தப்பிச் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களில் ஒன்றின் பதிவு எண் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. டிஎன் 10 ஏபி 9460 என்ற வாகனத்தின் பதிவு எண்ணை அனைத்து காவலர்களுக்கும் அனுப்பி வைத்து தேடுதல் வேட்டை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. கொள்ளையனான வங்கியின் மார்க்கெட்டிங் மேனேஜர் முருகனுடைய புகைப்படமும் வெளியிடப்பட்டு அதுவும் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளியேறும் அனைத்து வழிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வாகன சோதனையின் போது துப்பாக்கியுடன் வரும் கொள்ளையர்களை பிடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, அவர்களை பிடிக்கும் காவலர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE