உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் கண்மூடித்தனமாக கற்களை வீசித் தாக்கியதில், கல் ஒன்று தாக்கியதில் பிறந்து ஒன்பது நாட்களே ஆன குழந்தை உயிரிழந்தது.
கன்னோஜ் கிராமத்தில் குடிபோதையில் அக்கம்பக்கத்தினரிடம் மோதலில் ஈடுபட்ட 22 வயதான சத்கர் சிங், ஒரு கட்டத்தில் கண்மூடித்தனமாக அனைவரின் மீதும் கற்களை வீசத் தொடங்கினார். இதில் கல்லால் தாக்கப்பட்ட பிறந்து ஒன்பது நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்தது.
இது தொடர்பாக பேசிய கன்னோஜ் எஸ்பி குன்வார் அனுபம் சிங், “வியாழன் அன்று சத்கர் சிங் குடித்துவிட்டு இரவு 10 மணியளவில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ரகளை செய்யத் தொடங்கினார். மக்கள் அவரைத் தட்டிக்கேட்டபோது, அவர் தனது வீட்டின் கூரையின் மீது ஏறி மக்களின் மீது கற்களை வீசத் தொடங்கினார். அப்போது வீட்டின் முற்றத்தில் பாரி என்ற பெண்ணின் மடியில் உறங்கிக் கொண்டிருந்த 9 நாட்களே ஆன சிசுவை கல் ஒன்று தாக்கியது. உடனடியாக அந்த குழந்தை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அதிகாலை 4 மணியளவில் அந்த குழந்தை இறந்தது” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து சத்கர் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.