ரூ.12 லட்சம் தப்பியது; டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து மதுபான பாட்டில்கள் கொள்ளை!

By கோ.கார்த்திக்

அச்சிறுப்பாக்கம் அருகே கடைமலை புத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மர்ம நபர்கள் கதவை உடைத்து மதுபான பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே கடமலை புத்தூர் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு மதுபான கடை ஊழியர்கள் விற்பனை முடித்து கடையை மூடி விட்டுச் சென்றனர். இந்நிலையில், நள்ளிரவில் மர்மநபர்கள் மின்சாரத்தை துண்டித்து, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களை உடைத்தும் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையின் ஷட்டர் கதவை இரும்புக் கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து, விலை உயர்ந்த மது பாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் முந்தைய நாள் மது விற்பனை செய்த பணத்தை ஊழியர்கள் கையோடு கொண்டு சென்றதால் பணம் கொள்ளை போகாமல் தப்பியது.

பணம் இல்லாத காரணத்தினால், கொள்ளையர்கள் கட்டைப் பைகளில் மதுபான பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவ்வழியாக ரோந்து வந்த போலீஸாரைக் கண்டதும், கொள்ளையர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில், மதுபானக் கடையின் கதவை உடைத்து நடைபெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், கொள்ளையர்கள் டாஸ்மாக் கடையில் பணம் வைக்கும் இரும்பு லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளதாகவும். ஆனால், லாக்கரை உடைக்க முடியாததால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விற்பனையில் வசூலான ரூ. 12 லட்சம் தப்பியதாகவும் டாஸ்மாக் நிர்வாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அச்சிறுப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE