சேலத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் மத்திய உளவுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சுமார் 15 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் செல்போன், டேப்டாப் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இதே போல ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிலிருந்ததாக சேலத்தில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது ஏ.பள்ளிப்பட்டி. இவ்வூரைச் சேர்ந்த ஆசிக். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேலம் நகராட்சி பகுதியில் உள்ள கோட்டைப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாப்பேட்டையில் உள்ள ஒரு வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மத்திய உளவுப் பிரிவு போலீஸாரும், க்யூ பிரிவு போலீஸாரும் அவரைப் பிடித்து 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்தனர்.
விடியவிடிய நடைபெற்ற விசாரணையில் சமூக வலைத்தளங்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் அவர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆசிக் சேலம் டவுன் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். டவுன் காவல்நிலைய ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்மீது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.