கண்முன்னே ஆற்றில் மூழ்கிய மகள்கள்: காப்பாற்றப் போன தந்தைக்கு நேர்ந்த துயரம்!

By காமதேனு

செங்கல்பட்டு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாலாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்த பரிதாப சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(44). மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று குடும்பத்துடன் சென்னையிலிருந்து மேல்மலையனூர் சென்றார். இவர்கள் தரிசனத்தை முடித்துவிட்டு இன்று காலை வீடு திரும்பி கொண்டிருந்தனர். செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் வந்தபோது பாலாற்றில் தண்ணீர் செல்வதைப் பார்த்து அனைவரும் பாலாற்றில் குளிக்க சென்றனர்.

அவரின் மகள்களான வேதஸ்ரீ (10) என்பவரும், சிவசங்கரி ஆகியோர் முதலில் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினர். இதைக் கண்டு அவர்களைக் காப்பாற்ற இறங்கிய சீனிவாசனும் ஆற்றில் மூழ்கினார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி வேதஸ்ரீ மற்றும் சிவசங்கரி ஆகியோரின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து சீனிவாசனின் உடலை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து படாளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE