ஒரே சிரிஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி: சுகாதார ஊழியர் மீது அதிரடி நடவடிக்கை!

By காமதேனு

மத்தியப் பிரதேசத்தின் சாகர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரே சிரிஞ்ச் மூலமாக 39 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த மெகா தடுப்பூசி இயக்கத்தின் போது சாகர் நகரில் உள்ள ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமையன்று இந்த சம்பவம் நடந்தது. ஒரே சிரிஞ்ச்-யின் மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட ஜிதேந்திர அஹிர்வார் என்பவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவரை காவல்துறை கைது செய்துள்ளது.

15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சில மாணவர்களின் பெற்றோர், ஒரே சிரிஞ்ச் மூலம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதைக் கவனித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அஹிர்வார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அஹிர்வார் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் சுகாதாரத் துறையால் தடுப்பூசி திட்டத்தை மேற்கொள்வதற்காக பயிற்சி பெற்றவர் என்று சாகர் மாவட்டத்தின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் டி.கே.கோஸ்வாமி தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து வீடியோவில் பேசிய அஹிர்வால், " இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை. எனது துறைத் தலைவர் ஒரு சிரிஞ்ச் மட்டுமே கொடுத்து தடுப்பூசி செலுத்த சொன்னார்" என்று கூறினார். அஹிர்வாரின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் கோஸ்வாமி, சம்பவத்திற்கு பொறுப்பான மாவட்ட தடுப்பூசி அதிகாரி ஷோபராம் ரோஷன் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

இதற்கிடையில், நேற்று சுகாதார அதிகாரிகள் 39 குழந்தைகளையும் பரிசோதித்து, சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதன் அறிக்கைகள் சாதாரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE