ஆவடியில் பெண்ணிடம் நகை பறித்த காவலர் - கம்பத்தில் கட்டி வைத்து மக்கள் தாக்கினர்

By KU BUREAU

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி,பக்தவச்சலாபுரம், ஐயப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் ஓய்வு எடுப்பதற்காக வீட்டுக்குச் சென்றார். அப்போது, அவரது மனைவி ராதா (55) கடையைப் பார்த்துக் கொண்டார்.

அப்போது, அவரது கடைக்கு வந்த நபர் ஒருவர், பொருட்கள் வாங்குவது போல் நடித்து, ராதாவின் கழுத்தில் இருந்த 15 பவுன் செயினை பறித்து தப்பி ஓடினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராதா கூச்சலிட்டார். அவரது சத்தத்தைக் கேட்டு உடனே, அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி சென்று அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர், மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலானது.

தகவல் அறிந்த ஆவடி போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து அந்த நபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், தலையாடி கோட்டை பகுதியைச் சேர்ந்த பொக்கர் (32) என்பதும், டெல்லியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. சென்னைக்கு பணி நிமித்தமாக வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து, போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE